A POEM BY
ANDRILAN
நன்னம்பிக்கை முனை
யாவற்றையும் நகர்த்தி கொண்டே
போகும் நதி
தன் மீது விழும் மரத்தின்
நிழலை
ஏதும் செய்ய இயலாது
கடந்தபடியிருக்கிறது.
யாருக்காகவோ ஒப்படைக்கப்பட்ட
காலக் கண்ணாடியின்
பிம்பங்கள்
நாளில் பட்டு
எதிரொலிக்கின்றன.
எந்திரச் சக்கரங்களின்
சுழற்ச்சியில்
நசுங்கியபடியிருக்கின்ற
நினைவுப்ப ழங்கள்.
ஒரு சட்டத்திற்குள்
நிழற்படமாக
மாட்டப்பட்டிருக்கிறது
ஜன்னல் வானம்.
எங்கிருந்து தொடங்கி
எதில் முடியுமெனத்
தெரியாத வாழ்வு
தன் பாதையில்
கையூன்றிக் கரணமிடுகிறது.
கண்ணீர் விசும்பலில்
பட்டுத் தெறித்த
துளி
பெரும் துயரொன்றை
வெட்டிச் சாய்க்கிறது.
கால அளவீட்டாளன்
அடையாளப்படுத்துகிறான்
வாழ்வின்
வரைபடத்தில்
நன்னம்பிக்கை
முனையொன்றை.
காகிதக் கப்பலாயினும்
தொடர்கிறது
அவரவர் பயணம்
அம்முனையை நோக்கியே.
No comments:
Post a Comment